Tuesday, September 01, 2015

தலைமைத்துவம் இஸ்லாமிய கண்ணோட்டமும் அரசியல் தலைமைகளும்.

இஸ்லாம் என்பது கட்டுப்படலின் அடிப்படையில் அமைந்த மார்க்கமாகும். எவனிடத்தில் கட்டுப்பாடு இல்லையோ அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவ்வளவு தூரம் கட்டுப்பாடு இஸ்லாத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அல்லாஹுத்தஆலாவுக்கும் அதன் பின் அவனது தூதருக்கும் அதன் பின் அதிகாரிக்கும் (தலைவருக்கும்) கட்டுப்பட்டு நடங்கள் என்று ஏவியுள்ளதை நாம் அறிவோம். ஒழுங்கும், கட்டுப்பாடுமே,  தலைமைத்துவம், முகாமைத்துவம் என்று  இன்று ஒரு விஞ்ஞானமாகவே வளர்ச்சி கண்டுள்ளது.

இஸ்லாம் பல வகையிலும் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மார்க்கமாகவும் அதனை பல இடங்களில் பேசுகின்ற மார்க்கமாகவும் இருக்கின்றது. தலைமைத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு நோக்குகின்றது என்பதற்கு முன்னராக தலைமைத்துவம் என்றால் என்ன? என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது என்பதை அறிவது அவசியம். அடுத்தவர்களின் துணையுடன்  இலக்குகளை அறிந்து கொள்ளல், மக்களை ஒரு குறிப்பிட்ட துறையில் நகர்த்திச் செல்வது, குறிப்பிட்ட  இலக்கிற்காக இயங்குகின்ற மக்களை உறுவாக்குதல் என்று பலவாறு கூறப்படினும், வழுக்கட்டாயமற்ற வழக்குகளைக் கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவைத் தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் வழிநடத்திச் செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம் என்று கலாநிதி ஹிஸாம் அத்தாலிப் கொடுக்கும் விளக்கம் இதற்கு உகந்ததாக அமையும்.


ஆனால் இன்று உலகமோ தலைமைத்துவம் என்பதற்கு மேற்குலகம் காட்டும் சில கோட்பாடுகளை விளக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. அக்கோட்பாடுகளோ, ஆத்மீக ரீதியாகவோ, மதரீதியாகவோ எவ்வித விளக்கங்களையும் கொண்டவையல்ல. மாறாக உலக இலாபங்களை, அடைவுகளை இலக்காகக் கொண்டே அவை அமைந்துள்ளன.

ஆனால் இஸ்லாம் அல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் அழகான விளக்கங்களை தலைமைத்துவம் தொடர்பாக காட்டியிருப்பதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்ற அல்-குர்ஆன் வசனத்திற்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அனைத்து துறைகளிலும் பிரச்சினைகளிலும் அவரது வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டவன் வெற்றி பெறுவதில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வகையில் சிறந்த தலைவருக்குரிய சிறந்த முன்மாதிரி அவரைத் தவிர வேறுயாரும் இல்லை. தாம் எடுத்துக் கொண்ட காரியத்தை சிறந்த முறையில் செய்து முடிப்பார்கள். தான் பிரச்சாரம் செய்த அனைத்து விடயங்களையும் தன்னுடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். தேவையான சந்தர்ப்பங்களில் சஹாபாக்களின் உதவிகளையும் ஆலோசனைகளயும் பெற்றுக் கொண்டார்கள். இத்தகைய உயரிய தலைமைத்துவ குணங்களாலேயே அன்றைய அரேபிய சமூகத்தில் காணப்பட்ட சவால்களை எதிர்கொண்டு இஸ்லாத்தை வாழவைத்தும், அரேபியாவுக்கு வெளியேயும் இஸ்லாத்தைப் பரப்புவதற்கு அவர்களால் முடியுமாக இருந்தது.

இவ்வாறு இஸ்லாமிய தலைமை எமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கின்றது. அந்தத் தலைமைத்துவம் மார்க்கத்தையும் அரசியலையும் ஒன்றினைத்ததாகக் காணப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் இது பிளவுபட்டதாக இருக்கின்றது. அரசியல் ரீதியாக சில தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தில் உள்ள அதே வேளை மார்க்க ரீதியாக சில வழிகாட்டல்களையும் வழங்க முஸ்லிம் சமூகம் சில தலைவர்களையும் கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில் இலங்கையிலும் அதே நிலைதான் காணப்படுகின்றது. இஸ்லாமிய தலைமைத்துவம் மார்க்கம் என்றும் அரசியல் என்றும் பிரிந்து காணப்படுகின்றது. மார்க்க ரீதியாக வழிகாட்டல்கள் சிறந்த முறையில் வழங்கப்படுகின்றது என்று நம்மால் ஊகிக்க முடிகின்றது. ஆனால் அடுத்த பக்கமாக அரசியல் பக்கமானது ஆழ்ந்த ஆய்வுக்கும் அடிப்படையான மாற்றங்களுக்கும் தேவையுடையதாக இருக்கின்றது.

இலங்கை அரசியலில் முஸ்லிம் தலைமைகளின் ஆதிக்கமானது ஒரு காலத்தில் சிறப்பாக விளங்கியது. எனினும் அது இன்று பலவீனமுற்று காணப்படுகின்றது. அன்றையஅரசியல் தலைவர்கள் தாம் கொண்டிருந்த பதவியின் மூலம் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தந்து சென்றுள்ளனர். முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு வானொலிச் சேவை பெற்றுத் தரபட்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இது கிடையாது. இந்தியாவிலும் கூட கிடையாது. முஸ்லிம்களுக்கென்று தனியான அரச பாடசாலைகள் உருவாக்கப்படடுள்ளன. விவாகப் பிரிவு வழக்கை விசாரிக்க தனியான நீதிபதிகளான காழீ நீதிபதிகள் உள்ளனர். வக்புசட்டம், திருமணப் பதிவுசட்டம் என்று பாரியமாற்றங்கள் அன்றைய அரசியல் தலைமைத்துவத்தினால் மேற் கொள்ளப்படடுள்ளது.

கவலைக்கிடமானவிடயம் என்னவென்றால் அன்மைக் காலங்களாக முஸ்லிம் சமூகம் பலதொல்லைகளுக்கும், பிரச்சிரனைகளுக்கும் முகம் கொடுப்பதற்கான பிரதான ஒரு காரணம் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பலவீனமும், பொடுபோக்குத்தன்மையுமே ஆகும். அடிப்படையில் இஸ்லாமிய வாழ்வை இழந்தவர்களாக சில தலைவர்களை நாம் கண்டுள்ளோம், காண்கின்றோம்.

அவர்களின் செயற்பாடுகள் இவற்றுக்கு சான்று பகர்வதாக அமைவது கவலைக்கிடமான அம்சமாகும். தேர்தல் நெருங்குகின்ற போது தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் இவர்கள் அதனை எந்தளவு நிறைவேற்றியுள்ளனர். மனிதன் பலவீனமானவன். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்,பொடுபோக்கானவன் என அறிந்தே அல்லாஹ் வாக்குறுதிகளை வழங்குகின்ற போது அவனை ஞாபகப்படுத்திக் கொண்டே இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு சொல்லியிருக்கின்றான். எத்தனை தலைவர்கள் தம் வாக்குறுதிகளை பறக்கவிடும் போதுஅதில் இன்ஷா அல்லாஹ் என்ற வாசகத்தை இணைத்துக் கொள்கின்றனர்.
ஐவேளை தொழுகையை எவ்வளவு பேணுதலாக நிறைவேற்றுகின்றனர். எந்தளவு அல்-குர்ஆனை திலாவத் செய்கின்றனர், மக்களுடன் இன்முகம் கொண்டு கதைக்கின்றனர் என்று இஸ்லாமிய வாழ்க்கை ரீதியாக நோக்கின் அவர்களின் வாழ்வு எப்படி இருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அன்மையில் கூட முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பிரபலமான ஒருவர் பிக்கு ஒருவருக்கு வணக்கம் செலுத்துவதாகவும்,அந்நிய ஆண்,பெண் கலப்பு கொண்ட அநாச்சார வைபவமொன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதையும் கொண்ட படங்கள் பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் வளம் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அது உண்மையாக இருக்கலாம், அல்லது பொய்யாக இருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் அதை விட பாரதூரமான நிகழ்வுகள் எம் கண்முன்னே எம் அரசியல் தலைவர்களால் நிகழ்த்தப்படலாம்.
உலக வரலாறு எமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தருகின்றது. எல்லா நாடுகளில் இருந்தும் கற்பதற்கான பல படிப்பினைகள் எமக்குண்டு. உலக அரசியல் மாற்றத்தின் தாக்கம் இலங்கை முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. எனவே இந்நாட்டிற்கு வர இருக்கின்ற ஆபத்தைப் பற்றி நாம் பெரும்பான்மை சமூகத்திற்கு எச்சரிக்க வேண்டியுள்ளது. எனினும் அதை செய்ய எம் அரசியல் தலைவர்கள் தவறிவிட்டனர்.

பிரச்சினைகளின் போது சற்று முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பிவிட்டு தம் சுயநலத்திற்காக உழைக்கும் தலைவர்களையே நாம் காண்கின்றோம். ஆனால் அதன் மூலம் எந்தவித பலனும் கிடைப்பதில்லை. சிறிதளவு தாக்கத்தை தவிர உண்மையில் எமது சமூகத்தை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே எம்மை பாதுகாக்க முடியாது. இந்த நாட்டை பாதுகாப்பதன் மூலமே எங்களை பாதுகாக்கலாம் என்று சமூக சேவையாளர் ரீஸா யஹ்யா குறிப்பிட்ட கருத்தை இன்றைய அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.
பாரிய மாற்றங்களுக்கு எம்முடைய அரசியல் கலாச்சாரம், தலைமைகள் உட்பட வேண்டியிருக்கின்றது. மிக முக்கியமாக ஆன்மீக ரீதியான சீர்திருத்தம் வழிகாட்டல் தேவையாக உள்ளது. அதே போல புதிய திறமையான அரசியல் தலைமைகளின் தேவைப்பாடும் அதை உருவாக்க வேண்டிய பொறுப்பும் முஸ்லிம் சமூகத்திடம் காணப்படுகின்றது.
நாம் எதிர் நோக்கியுள்ள தேர்தலில் தற்போது உள்ள தலைமைகளையே தெரிவு செய்ய வேண்டியிருப்பினும் முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான பிரச்சினையே இன்று அதிக அழுத்தம் காட்டப்படுவதால் ஆழ்ந்த சிந்தனையுடன் தேர்தல்களில் வாக்கிட முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டுள்ளது.
Salman Faris (2nd year)

No comments:

Post a Comment